இந்தியாவிற்காக X440-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்கிராம்ப்ளர் பைக்கை உருவாக்கும் ஹார்லி டேவிட்சன்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய X440 மாடல் பைக்கை வெளியிட்டது அமெரிக்க ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன். ஹீரோவுடன் கைகோர்த்து இந்தியாவில் இந்தப் புதிய மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து தற்போது புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தப் புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்கை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக டெலிவரியையும் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும், இந்தப் புதிய பைக்கையும் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹார்லி டேவிட்சன்
ஹார்லி டேவிட்சனின் புதிய X440 ஸ்கிராம்ப்ளர்:
புதிய ஸ்கிராம்ப்ளரை சில மாதங்களுக்கு முன்பு வெளியான X440-யை தயாரித்த அதே பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கவிருக்கிறது ஹார்லி டேவிட்சன்.
மேலும், X440 மாடலில் பயன்படுத்திய, 27hp பவர் மற்றும் 38Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட, அதே 440சிசி இன்ஜினையே புதிய ஸ்கிராம்ப்ளர் மாடலிலும் பயன்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
இதனைத் தவிர சேஸி, டிரான்ஸ்மிஷன் முதல் வீல் வரை அனைத்தையும் ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கு ஏற்ற வகையில் புதிதாக வடிவமைக்கவிருக்கிறது ஹார்லி டேவிட்சன்.
புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்குக்கு கூடுதல் கிரௌண்டு கிளியரன்ஸை வழங்க ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய 19 இன்ச் அலாய் மற்றும் வயர் ஸ்போக் வீல்களையும் அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஹார்லி டேவிட்சன்.