இனி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வண்டி மாற்றுவது ஈஸி! NOC தேவையில்லை? மத்திய அரசின் அதிரடித் திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள், தங்கள் வாகனங்களை அங்கேயே பதிவு செய்ய அந்தந்த மாநில ஆர்டிஓ அலுவலகத்தில் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாகும். ஆனால், இந்த நடைமுறை மிகவும் சிக்கலாகவும், காலதாமதமாகவும் இருப்பதால், இதனை ரத்து செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது ஒரு வாகனத்தை வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமானால், அந்த வாகனத்தின் அசல் ஆர்டிஓவிடம் இருந்து NOC பெற வேண்டும். அந்த வாகனத்தின் மீது வரி நிலுவை, அபராதம் அல்லது திருட்டு வழக்குகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தவே இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்குப் பல ஆவணங்களைச் சமர்ப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
பரிந்துரை
புதிய பரிந்துரை என்ன?
நிதி ஆயோக் அமைத்துள்ள உயர்நிலைக் குழு, இந்த NOC முறையை முழுமையாக ரத்து செய்யப் பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், நேரில் சென்று வழங்கும் காகித ஆவணங்களுக்குப் பதிலாக, ஆன்லைன் மூலமே தானியங்கி முறையில் வாகனத்தின் விபரங்களைச் சரிபார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இந்தியாவின் அனைத்து வாகன விபரங்களும் மத்திய அரசின் வாகன் தரவுத்தளத்தில் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு மாநில அதிகாரி மற்றொரு மாநில வாகனத்தின் விபரங்களை ஆன்லைனிலேயே சில நொடிகளில் சரிபார்த்துவிட முடியும். இதனால் NOC என்ற காகிதச் சான்றிதழ் தேவையற்றதாகிறது.
லாபம்
வாகன உரிமையாளர்களுக்கு என்ன லாபம்?
ஆர்டிஓ அலுவலகங்களுக்குப் பலமுறை அலைவது தவிர்க்கப்படும். இடைத்தரகர்கள் இன்றி ஆன்லைன் மூலமே வேலைகள் முடியும். பழைய கார்கள் மற்றும் பைக்குகளை மாநிலம் கடந்து விற்பனை செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தப் பரிந்துரையைத் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.