சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு?
செய்தி முன்னோட்டம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது, அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி.
இந்தியாவில் முன்பு குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் இரண்டு கார் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது ஃபோர்டு.
இந்தியாவிலிருந்து வெளியேறியதையடுத்து, குஜராத்தின் சனந்த்தில் உள்ள தொழிற்சாலையை இந்தியாவின் டாடா மோட்டார்ஸிடம் விற்பனை செய்தது ஃபோர்டு.
அதனைத் தொடர்ந்து, சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையையும் இந்தியாவைச் சேர்ந்த JSW நிறுவனத்திடம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
ஃபோர்டு
புதிய முடிவில் ஃபோர்டு:
சென்னையில் உள்ள தங்களது தயாரிப்பு தொழிற்சாலையை விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பதாகவும், பிற நிறுவனங்களுடனான விற்பனைப் பேச்சுவார்த்தையை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
"சென்னை தொழிற்சாலையின் மாற்று வழிகளைக் குறித்து சிந்தித்து வருகிறோம். சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" ,என இது குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் ஃபோர்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.
350 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 1,50,000 கார்களையும், 3,40,000 இன்ஜினைகளையும் தயாரிக்கும் திறனைக் கொண்ட ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை கார் தயாரிப்பு தொழிற்சாலையானது 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.