இந்தியாவில் வெளியானது 'Ferrari 296 GTS'.. விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
புதிய '296 GTS' மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஃபெராரி. அந்நிறுவனத்தின் 296 GTB-யின் கன்வர்டிபிள் வெர்ஷன் என இந்த GTS-ஐ கூறலாம்.
இந்த மாடலின் கன்வர்டிபிள் வசதிக்கு ஏற்ற வகையில் GTB-யின் டிசைனில் சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்தது போல் இருக்கிறது GTS-ன் டிசைன்.
இந்தியாவில் ஃபெராரியின் 296 லைன்-அப்பில் வெளியாகியிருக்கும் இரண்டாவது மாடல் இது. தற்போது இந்தியாவில் GTB ஹார்டு டாப் மாடலின் டெலிவரியில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறது ஃபெராரி. எனவே, இனி வரும் மாதங்களில் GTS மாடலின் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 296 GTS-ன் கன்வர்டிபிள் ரூஃபானது விரிவடைவதற்கும், மடங்குவதற்கும் 14 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்திருக்கிறது ஃபெராரி.
ஃபெராரி
இன்ஜின் மற்றும் விலை:
GTS-ன் இன்ஜினில் எந்த மாற்றத்தையும் ஃபெராரி செய்யவில்லை. 296 GTB-யில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த 296 GTS-லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
664hp பவரை உற்பத்தி செய்யும் 3.0 லிட்டர் V6 இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் சேர, ஒட்டுமொத்தமாக 830hp பவர் மற்றும் 740Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன GTB-யும், GTS-ம்.
330 கிமீ அதிகபட்ச வேகத்தைக் கொண்டிருக்கும் இந்த GTS ஆனது, 0-100 கிமீ வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிப்பிடிக்கிறது. GTB-யும் கிட்டத்தட்ட இதே வேகத்தையே கொண்டிருக்கிறது. ஆனால், GTB-யை விட GTS-ன் எடை 70 கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ரூ.6.24 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த ஃபெராரி 296 GTS.