தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிப்புக்கும் V12 இன்ஜினையே பயன்படுத்தவிருக்கும் ஃபெராரி
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய 812 சூப்பர்பாஸ்ட் கூப் கார் மாடலின் மேம்பட்ட வடிவமாக புதிய கார் ஒன்றை 2024-ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபெராரி (Ferrari). இந்த 812 மாடலில் V12 எரிபொருள் இன்ஜினை ஃபெராரி பயன்படுத்தியிருந்தது. எதிர்பாரா விதமாக, அடுத்து வெளியாகவிருக்கும் புதிய காரிலும் இந்த V12 இன்ஜினையே சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொண்டு பயன்படுத்தவிருக்கிறது ஃபெராரி. பிற கார் தயாரிப்பாளர்கள், சிறிய இன்ஜின்கள் மற்றும் ஹைபிரிட் இன்ஜின் பயன்பாட்டிற்கு மாறி வரும் போது, ஃபெராரி மட்டும் தங்களுடைய பெரிய இன்ஜினைப் பயன்படுத்துவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இன்னும் சில காலத்திற்கு தங்களுடைய ஃப்ளாக்ஷிப் கார்களில் V12 இன்ஜினையே பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஃபெராரி.
ஃபெராரியின் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்:
இதுவரை எரிபொருள் கார்களுடன் ஹைபிரிட் கார்களை மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபெராரி. அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காரானது 2025ம் ஆண்டே வெளியாகவிருக்கிறது. இதுவரை V12 இன்ஜின் பயன்படுத்தப்பட்ட மாடல்களில், டேடோனா SP3 மாடலில் அதிகபட்சமாக 829hp பவரை வெளிப்படுத்தியிருக்கிறது அந்த V12. இந்நிலையில், புதிய காரில் இதனை விட சற்று கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் V12 இன்ஜினில் மாற்றம் செய்யவிருக்கிறது ஃபெராரி. தங்களுடைய சிறிய இன்ஜின்களான V6 மற்றும் V8 இன்ஜின்களின் ஹைபிரிட் வடிவங்களையும் தங்களுடைய பிற கார்களில் ஃபெராரி பயன்படுத்தி வரும் நிலையில், V12 இன்ஜினை எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் எதுவும் அந்நிறுனத்திடம் தற்போதைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.