புதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி?
இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்ட தங்களுடைய புதிய 5-டோர் ஜிம்னியை கடந்த வாரம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆஃப்-ரோடிங் எஸ்யூவிக்களான மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா ஆகிய கார்கள் 3-டோர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. அனைத்து வேரியன்ட்களிலும் K15B, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது மாருதி. முதன் முதலாக 5-டோர்களுடன் வெளியான ஆஃப்-ரோடிங் எஸ்யூவி ஜிம்னி தான். இந்த புதிய ஜிம்னியானது, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது. கூடுதலாக டூயல் டோன் கலர் கொண்ட மற்றொரு வேரியன்ட்டையும் வெளியிட்டிருக்கிறது மாருதி. மேற்கூறிய இரண்டு வேரியன்ட்களிலும் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி?
மாருதி ஜிம்னி வேரியன்ட்கள்:
ஸெட்டா: ஹாலஜன் முகப்புவிளக்குகள், கருப்பு நிற ஹேண்டில்கள், ரியர் வைப்பர், வீல்ஆர்ச் கிளேடிங் மற்றும் ஸ்டீல் வில்களைக் கொடுத்திருக்கிறது மாருதி. காரின் உள்ளே, பவர் விண்டோ, 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஏர்பேக்குகள் மற்றும் ரியர்-வியூ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆல்ஃபா: ஸெட்டாவில் உள்ள அனைத்து அம்சங்களும் ஆல்ஃபாவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹாலஜன் முகப்பு விளக்குகளுக்குப் பதிலாக ப்ரொஜெக்டர் எல்இடி முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு, ஹெட்லேம்ப் வாஷர், ஃபாக் லேம்ப், 15-இன்ச் அலாய் வீல். உள்பக்கம், 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனுடன் கூடிய கீலெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்போல், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆல்ஃபா வேரியன்ட்டை டூயல் டோன் கலர் ஆப்ஷனிலும் பெற்றுக் கொள்ளமுடியும்.