'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மாசு உமிழ்வை பகுப்பாய்வு செய்யும் எமிஷன் அனலிட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒரு புதிய கருத்தை முன்வைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் op-ed இல் இந்த ஆய்வு வெளியாகி இருக்கிறது. மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து உருவாகும் துகள் மாசுபாட்டின் சிக்கல் குறித்து இந்த ஆய்வு பேசியுள்ளது.
EVகள் 1,850 மடங்கு அதிகமான மாசுவை வெளியிடக்கூடும்
இந்த ஆய்வின் மூலம் முக்கியான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. பொதுவாக, பெட்ரோல்/டீசல் கார்களை விட எலக்ட்ரிக் கார்களின் எடை அதிகமாக இருப்பதால், பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து வெளியாகும் மாசு துகள்கள், எலக்ட்ரிக் கார்களிலில் அதிகமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதன் மாசு பெட்ரோல் கார்களை விட 1,850 மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். EVகளின் அதிக எடையினால், அதன் டயர்கள் மிக வேகமாக தேய்மானம் அடைந்து, அது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை காற்றில் வெளியிடுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.