எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம்
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகமாக ஊக்குவிக்கிறது அம்மாநில அரசு. புதிதாக எலெக்ட்ரிக் வானங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் ரேஞ்சே முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அதிகளவிலான புதிய சார்ஜிங் பாய்ன்ட்கள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் பாய்ன்ட்களை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது டெல்லி அரசு. இதற்காக டெல்லியில் உள்ள அதிக வாகனப் புழக்கம் உள்ள 42 இடங்கள் இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும், பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களும் அமைப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள்:
இந்த புதிய மையங்கள் அமைக்கப்பட்டவுடன், மொத்தம் 173 சார்ஜிங் ஸ்டேஷன்களையும், 62 பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களையும் டெல்லி கொண்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் யூனிட்டுக்கு ரூ.9-10 வரை வசூலிக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒரு யூனிட்டை ரூ.3 என்ற குறைவான விலையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது டெல்லி அரசு. இந்த புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை ev.delhi.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க, முக்கிய பொது இடக்கள், மால்கள், அப்பார்ட்மென்ட்களில், கோரிக்கை அடிப்படையில் எலெக்ட்ரிக் சார்ஜிங் பாய்ன்ட்கள் அமைக்கப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்திருக்கிறது.