
இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!
செய்தி முன்னோட்டம்
சர்வதேச சந்தைக்கான 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சிட்ரன். இந்தியாவில் C3 ஹேட்ச்பேக் மற்றும் C5 ஏர்கிாஸ் எஸ்யூவி மாடல்களைத் தொடர்ந்து, இது சிட்ரனின் மூன்றாவது மாடல்.
நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறது சிட்ரன். இந்தியாவில் 30 டீலர்களைக் கொண்டிருக்கும் அந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை 100-ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறது.
சிட்ரனின் CMP மாடுலார் ப்ளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. C3 மாணிக்கரின் ஸ்டைலிங்கையும், C3 ஹேட்ச்பேக்கின் இன்ஜினையும், C3 ஏர்கிராஸோடு பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.
வாகனத்தின் நீளமும், வீல்பேஸின் நீளமும் சற்றே கூடுதலாகவே இருக்கின்றன. எனவே, மிட்சைஸ் எஸ்யூவி செக்மண்டில் இந்தக் கார் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு சீட்டிங் ஆப்ஷன்கள் இந்த C3 ஏர்கிராஸில் கொடுக்கப்படவிருக்கின்றன.
இதன் உள்பக்க டிசைன் C3 ஹேட்ச்பேக்கை ஒத்திருக்கிறது. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டேஷ்போர்டை இதிலும் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சின்ன சின்ன புதிய அம்சங்களை மட்டும் உடன் சேர்த்திருக்கிறது சிட்ரன்.
இதில் 110hp பவர் மற்றும் 190Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது சிட்ரன். அவ்வளவுதான், அவ்வளவே தான்.. வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் எதையும் அந்நிறுவனம் C3 ஏர்கிராஸூக்கு கொடுக்கவில்லை.
C3 ஹேட்ச்பேக்கிலும் இதே இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.