இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..!
செய்தி முன்னோட்டம்
கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 50% கூடுதலாக புதிய கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாட்டோ டைனமிக்ஸ் என்று ஆட்டோமொபைல் ஆய்வு நிறுவனம் ஒன்று புதிய கார் வெளியீடுகள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் கடந்த நிதியாண்டில் 54 புதிய கார் மாடல்கள் வெளியான நிலையில், நடப்பு நிதியாண்டில் 81 புதிய கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
அதில் 38 மாடல்களை சொகுசு கார் நிறுவனங்கள் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
புதிய கார் மாடல்கள் என்றால் காஸ்மெடிக் மாற்றங்கள்,ஃபேஸ்லிஃப்ட், புதிய தலைமுறை கார்கள் ஆகியவை அடங்கும். இதில் புதிய வேரியன்ட் கார்கள் அடங்காது.
ஆட்டோ
விரிவடையும் பிரிவுகள்.. அதிகரிக்கும் ஆப்ஷன்கள்:
கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவிக்களின் மீது ஆட்டோ வாடிக்கையாளர்களுக்கு அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
2016-ல், எகோஸ்போர்ட் மற்றும் பிரெஸ்ஸா என இரண்டே இரண்டு தொடக்க நிலை எஸ்யூவி மாடல்கள் தான் விற்பனையில் இருந்தன. ஆனால், தற்போது 21 தொடக்க நிலை எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன.
மேலும், எஸ்யூவி பிரிவிலேயே மைக்ரோ எஸ்யூவி என்ற புதிய உட்பிரிவும் உருவாகியிருக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் எஸ்யூவிக்களுக்கு அளிக்கும் அமோக ஆதரவே காரணம்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரிவுகளும் உட்பிரிவுகளும் அதிகரிக்கின்றன.
வளர்ந்து வரும் புதிய எரிபொருள் தொழில்நுட்பங்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய கார்களை வெளியிடுவதற்கான காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.