2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் BMW மற்றும் மினி கார்கள்
2024-ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நான்கு புதிய கார்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூவும், மினியும். 2023-ல் புதிய X1 மற்றும் 7 சீரிஸ் கார்களை வெளியிட்டதுடன், X5 மற்றும் X7 சீரிஸ் எஸ்யூவிக்களுக்கான அப்டேட்களையும் வழங்கியிருந்தது பிஎம்டபிள்யூ. அதனைத் தொடர்ந்து 2024-ல் புதிய 5 சீரிஸ் மாடலையும், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான i5 மாடலையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரானது ரூ.70 லட்சம் தொடக்க விலையுடன், 2024ன் இறுதியில் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வெளியாவிருக்கும் புதிய மினி கார்கள்:
பிஎம்டபிள்யூவைத் தொடர்ந்து அதன் துணை நிறுவனமான மினியும் 2024-ல் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. முதலில், 2024-ன் தொடக்கத்தில், ரூ.58 லட்சம் மதிப்பிலான கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து, 2024-ன் இடைப்பகுதியில் புதிய கன்ட்ரிமேன் மாடலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மினி. கூப்பர் SE மாடலானது எலெக்ட்ரிக் வெர்ஷனாக மட்டுமே வெளியாகவிருக்கும் நிலையில், கன்ட்ரிமேனை எலெக்ட்ரிக், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என பல வேரியன்ட்களாகவும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். எலெக்ட்ரிக் வேரியன்டிலும், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என சில தேர்வுகளை மினி அளிக்கத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.