நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP'
இந்தியாவிற்கான சொந்த வாகன உறுதித்தன்மை மதிப்பீட்டு திட்டமான 'பாரத் NCAP'-ஐ நாளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. குளோபல் NCAP-ன் தரநிலைகளையே பாரத் NCAP-லும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தர நிர்ணயத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உலகிலேயே சொந்த வாகன தர நிர்ணய திட்டத்தைக் கொண்டிருக்கும் ஐந்தாவது நாடாகிறது இந்தியா. பெட்ரோல், டீசல் வாகனங்கள் மட்டுமின்றி, CNG மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களையும் பாரத் NCAP தர நிர்ணயத் திட்டத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். நாளை அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டமானது, அக்டோபர் 1 முதல் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த பாரத் NCAP?
இந்த பாரத் NCAP திட்டத்தின் கீழ், கார் தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய கார்களை சோதனைக்கு உட்படுத்தலாம். அதே நேரம், பாரத் NCAP-ம் தாமாகவே முன்வந்து ஷோரூம்களில் இருந்து கார்களைத் தேர்ந்தெடுத்தும் சோதனைக்கு உட்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தர நிர்ணயத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கார்கள் தரமாக இருப்பதையும் உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். குளோபல் NCAP-ஐ போலவே ஒன்றிலிருந்து ஐந்து ஸ்டார்கள் வரை தர மதிப்பீடு வழங்கப்படும். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கென தனித் தனியே ஸ்டார் ரேட்டிங்குகளை வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.