குளோபல் NCAP-க்கு நிகராக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தியாவிற்கான பாரத் NCAP
குளோபல் NCAP-ஐ போலவே, இந்தியாவிற்கான பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகளவில் வெளியாகும் கார்களை சோதனை செய்து, அவற்றின் பாதுகாப்புக்கான தர மதிப்பீட்டை வழங்கி வருகிறது குளோபல் NCAP. இந்த பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது குளோபல் NCAP போல முழுவதும் தன்னார்வ முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கார்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தச் சொல்லியும் கேட்கலாம், அல்லது சோதனை அமைப்பே குறிப்பிட்ட கார் மாடல்களை ஷோரூம்களில் இருந்து தேர்ந்தெடுத்து சோதனை செய்யலாம். இந்த சோதனைக்கான விதிமுறைகள் குறித்த கருத்துக்களைக் கேட்பதற்காக அதன் இறுதி வரைவை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்.
குளோபல் NCAP vs பாரத் NCAP:
வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெறும் கருத்துக்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் சின்னச் சின்ன மாற்றங்கள் கேட்கப்பட்டு பின்னர், அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் 3.5 டன் அல்லது அதற்கும் குறைவான எடை கொண்ட கார்கள் இந்த பாதுகாப்பு தரச்சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன. குளோபல் NCAP அமைப்பானது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மட்டுமே பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வந்த நிலையில், எலெக்ட்ரிக் மற்றும் CNG வாகங்களுக்கும் பாதுகாப்பு தரச்சோதனைகளை நடத்தவிருக்கிறது பாரத் NCAP. சோதனையில் முடிவில், பெரியவர்கள் மற்றும் குழைந்தைகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த அளவில் 1 முதல் 5 வரையிலான ஸ்டார் ரேட்டிங்குகளை வழங்கவிருக்கிறது பாரத் NCAP.