மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2024 பல்சர் NS200, NS160யை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ
இந்திய சந்தையில் புதிய தலைமுறை 2024 பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்களை வெளியிட்டுள்ளது பஜாஜ் ஆட்டோ. இந்த புதிய மாடல்களுக்கான விலைகள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவற்றின் முந்தைய மாடல்களை விட சற்றே விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 பல்சர் NS200 மற்றும் NS160 ஆகியவை இப்போது எல்இடி டிஆர்எல்களுடனும் எல்இடி ஹெட்லேம்புடனும் கிடைக்கிறது. கூடுதலாக, பல்சர் N160 மற்றும் N150 இல் முதலில் காணப்பட்ட ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்த்தியான பிளாக்-அவுட் கிளஸ்டரை இடது சுவிட்ச் கியரில் உள்ள பொத்தான் மூலம் கட்டுப்படுத்தலாம்.
2024 பல்சர் NS200, NS160இல் உள்ள அம்சங்கள்
இதில் இருக்கும் கியர் நிலை காட்டி, மொபைல் அறிவிப்பு எச்சரிக்கைகள், உடனடி எரிபொருள் சிக்கனம், காலிக்கான தூரம், சராசரி எரிபொருள் சிக்கனம் மற்றும் நேரம் போன்ற தகவல்களைக் காண்பிக்கும். லைட்டிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷனில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள்களில் எந்த இயந்திர மாற்றங்களையும் செய்யவில்லை. பல்சர் என்எஸ்200 மற்றும் என்எஸ்160 ஆகியவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 199.5சிசி மற்றும் 160.3சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார்களேயே கொண்டுள்ளன. சவாரி செய்யும் போது அழைப்புகளை ஏற்கும் மற்றும் நிராகரிக்கும் திறன், மோட்டார் சைக்கிளை மொபைல் ஃபோனுடன் இணைக்கும் திறன் ஆகியவை பஜாஜ் ரைடு கனெக்ட்டில் உள்ளது.