அடுத்த மாதம் வெளியாகிறது சொகுசுக் கார் மாடலான 'ஆஸ்ட்ன் மார்டின் DB12'
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஆஸ்டன் மார்டின், தங்களுடைய விலையுயர்ந்த காரான DB11-ஐ இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. தற்போது அதற்கு மாற்றான, அப்டேட் செய்யப்பட்ட DB12 மாடலை அடுத்த மாதம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. DB11-ன் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக வெளியாகவிருக்கும் DB12 மாடலிலேயே தங்களது புதிய லோகோவையும் பயன்படுத்தியிருக்கிறது ஆஸ்டன் மார்டின். மிகவும் சொகுசான காக்பிட், இன்-பில்ட் நேவிகேஷன், 10.25 டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போவன்ஸ் & வில்கின்ஸ் சவுண்டு சிஸ்டம் மற்றும் சென்டர் கண்சோல் ஆகிய வசதிகளை DB12-ல் கொடுத்திருக்கிறது ஆஸ்டன் மார்டின். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபெராரி ரோமா மற்றும் பெண்ட்லி காண்டினென்டல் GT ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய DB12.
ஆஸ்டன் மார்டின் DB12: இன்ஜின் மற்றும் விலை
புதிய DB12 சூப்பர் டூரரில், மெர்சிடீஸ் AMG-யின், ட்வின் டர்போசார்ஜ்டு, 4.0 லிட்டர் V8 இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஆஸ்டன் மார்டின். இந்த இன்ஜினானது, 680hp பவரையும், 800Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த டார்க்கானது, DB11-ன் V8 இன்ஜின் உற்பத்தி செய்ததை விட 34% அதிகமாகும். மேலும், 325கிமீ டாப் ஸ்பீடு கொண்ட இந்த DB12, 100கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. ஆனால், DB11 மற்றும் DB770-யில் பயன்படுத்திய V12 இன்ஜின் கொண்ட மாடலை DB12-ல் ஆஸ்டன் மார்டின் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரூ.4.8 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகவிருக்கிறது இந்த புதிய ஆஸ்டன் மார்டின் DB12.