தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுடனான உரையாடலின் போது இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அவர். முன்னதாக 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்துக்களையே அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் கருத்தையே தற்போதும் அவர் உறுதியாகக் கொண்டிருக்கிறார். மக்கள் தொகை குறைவாக உள்ள சிறிய நாடுகளுக்கு தானியங்கி கார்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உடைய நாடுகளுக்கு அது சரியான தேர்வாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார் அவர்.
ஆட்டோ
80 லட்சம் ஓட்டுநர்கள் வேலையிழக்கும் அபாயம்:
மேலும், இந்தியாவில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். தானியங்கி கார்களின் வரவு 80 லட்சம் பேரை வேலையிழக்கச் செய்யும். அது இந்தியாவைப் பொருத்தவரை பெரும் பிரச்சினையே எனத் தெரிவித்துள்ளார் அவர்.
இது தவிர இந்தியாவிற்கு டெஸ்லாவின் வரவு குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார் நிதின் கட்கரி. அதன்படி, இந்தியாவிற்கு டெஸ்லாவை வரவேற்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனாவில் கார்களை உற்பத்தி செய்து அதனை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
இந்தியாவிலேயே கார்களை உற்பத்தி செய்ய அவர்களுக்கு எப்போதும் கதவு திறந்தே இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.