ஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமுறை கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் அறிமுக தேதியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். 2003ல் இருந்து கரிஸ்மாவின் பிராண்ட் அம்பாசிடராக ஹிருத்திக் ரோஷன் உள்ளார். இன்ஸ்டாவில் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 29 அன்று கரிஸ்மாவின் புதிய மாடல் அறிமுகமாக உள்ளது. இது கூர்மையான தோற்றமுடைய பாடி பேனல்கள் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும், நேர்த்தியான டெயில் பிரிவு, உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களில் எல்இடி விளக்குகளை கொண்டிருக்கும். அதன் முந்தைய மாடலைப் போலவே 250சிசிக்கும் குறைவான பைக் பிரிவில் இதுவும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்
ரைடர் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் ஆகஸ்ட் 29 அன்று திட்டமிடப்பட்ட அதன் வெளியீட்டு விழாவில் புதிய கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 விலை மற்றும் அது எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. எனினும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை வட்டாரங்களின்படி, இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.8 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.