2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது. இந்த ஆண்டு உலகம் பல்வேறு மாற்றங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது உலக மக்கள் தொகை உயர்வு. இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக, உலகளாவிய மக்கள் தொகையானது 8 பில்லியனைக் கடந்திருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் உலகளாவிய மக்கள் தொகை 75 மில்லியன் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. மேலும், 2023-ல் உலகளாவிய மக்கள் தொகை உயர்வானது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமெரிக்க அமைப்பு.
மிகவும் குறைவான மக்கள் தொகை உயர்வைக் கொண்ட பத்தாண்டு:
2024ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஒவ்வொரு நொடியும், உலகளவில் 4.3 பிறப்புகளும், 2 இறப்புகளும் ஏற்படும் என கணித்திருக்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு. 1930-களுக்குப் பிறகு 2020-களே மிகவும் குறைவான மக்கள்தொகை உயர்வைக் கொண்ட பத்தாண்டுகளாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு. இந்த 2023ம் ஆண்டு தான் உலகளவில் சீன மக்கள்தொகையை இந்தியா பின்தள்ள முதலிடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதனை அதிகாரப்பூர்வ தகவலாக உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், சீனாவில் 2020ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கடைசியாக 2011ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடப்பட்டது. மேலும், பிறப்பு மற்றும் இறப்பு விகித அடிப்படையிலேயே மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்தள்ளியிருக்கலாம் என ஐநா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.