
UK பிரதமராக பதவியேற்கவிருக்கும் "சர்" கெய்ர் ஸ்டார்மர் யார்? இந்தியா-இங்கிலாந்து உறவுகளை அது எப்படி பாதிக்கும்?
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்கி விட்டது.
தற்போதைய நிலவரப்படி, லேபர் கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அவரது அவரது தொழிற்கட்சி பாராளுமன்றத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையை வெல்லும் என்று ஒரு கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்செர்வேடிவ் கட்சி வரலாற்று தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் கெய்ர் ஸ்டார்மர் யார்? அவரது லேபர் கட்சி பதவி ஏற்பதால், இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என பலரின் கேள்வியாக இருக்கிறது.
கெய்ர் ஸ்டார்மர்
யார் அந்த கெய்ர் ஸ்டார்மர்?
லேபர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், ஒரு முன்னாள் மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆவார்.
அவர் 2015ஆம் ஆண்டு முதல் MPயாகவும் பணியாற்றி வருகிறார். 61 வயதான ஸ்டார்மர் ஏறக்குறைய அரை நூற்றாண்டில் பிரிட்டிஷ் பிரதமராக பதவியேற்கவுள்ள மிக வயதான நபராக இருப்பார்.
மேலும் அவர் MP ஆக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் நைட் பட்டம் பெற்றவர். ஆனால் அரிதாகவே "சர்" என்ற பட்டத்தை அவர் பயன்படுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில், பிரிட்டனின் தொழிலாளர் கட்சியை வழிநடத்த கெய்ர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் லீட்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்.
இந்தியா- இங்கிலாந்து உறவுகள்
இந்தியா- இங்கிலாந்து உறவுகள் எப்படி இருக்கும்?
கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தேர்தல் முடிவு, இருதரப்பு உறவில் பெரிய தாக்கம் இருக்கக்கூடாது என்றாலும், சுனக் தலைமையிலான தற்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி கவலை எழாமல் இல்லை.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள்
எஃப்.டி.ஏ பேச்சுவார்த்தைகளில் உள்ள முக்கிய புள்ளிகள், இங்கிலாந்து சந்தையில் இந்தியாவின் திறமையான நிபுணர்களுக்கு அதிக அணுகல் வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை மற்றும் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்ற பொருட்களின் மீதான குறைந்த இறக்குமதி வரிகளுக்கு இங்கிலாந்தின் அழுத்தம் ஆகியவை அடங்கும்.
குடியேற்றம் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே இருந்தது.
தற்போது UK வில் போட்டியிடும் இரு முக்கிய கட்சிகளும் அதை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றன. சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் சேவைத் துறை பணியாளர்களுக்கான தற்காலிக விசாக்களுக்கான கோரிக்கைக்கு ஒரு தடையாக மாறக்கூடும்.