
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய ஆவணங்களைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்ததாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்புத் தகவல்களை சட்டவிரோதமாகத் தன் வசம் வைத்திருந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
சுயவிவரம்
யார் இந்த டெல்லிஸ்?
அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்த முக்கியமான நிபுணராக கருதப்படும் டெல்லிஸ், பல அமெரிக்க நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியவர். இந்தியாவில் பிறந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஒரு முக்கிய நபராக உள்ளார், 2001 முதல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். 2000களின் நடுப்பகுதியில் அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழும் டெல்லிஸ் மூத்த பதவிகளில் பணியாற்றினார்.
கைது
கைது மற்றும் குற்றச்சாட்டுகள்
டெல்லிஸ் கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டு திங்களன்று (அக்டோபர் 14, 2025) முறையாக நீதிமன்றத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டார். நீதிமன்றப் பதிவுகளின்படி, 2025 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், டெல்லிஸ், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை கட்டிடங்களில் இருந்து வகைப்படுத்தப்பட்ட பொருட்களை அணுகி, நகல் எடுத்ததுதுடன் அவற்றை அகற்றியுள்ளார். அமெரிக்க இராணுவ விமானத் திறன்கள் தொடர்பான ரகசியக் கோப்புகளை நகல் எடுத்த பிறகு, அவர் பிரீஃப்கேஸுடன் வெளியேறுவது CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது. அக்டோபர் 11 அன்று அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பூட்டிய கோப்பு அலமாரிகள், அலுவலக மேசை மற்றும் சேமிப்பு அறையில் உள்ள குப்பை தொட்டிகள் உள்ளிட்ட பல இடங்களில் ரகசிய ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரகசிய சந்திப்புகள்
சீன அதிகாரிகளுடன் ரகசிய சந்திப்புகள்?
இந்த வழக்கை மேலும் தீவிரமாக்கும் விதமாக, டெல்லிஸ் சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசாங்க அதிகாரிகளைப் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த சந்திப்பில், டெல்லிஸ் ஒரு கவருடன் வந்துள்ளார், ஆனால் அவர் திரும்பும்போது அந்த கவர் அவரிடம் இல்லை என்று முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு இரவு உணவு சந்திப்பின் போது, டெல்லிஸும் சீன அதிகாரிகளும் ஈரானிய-சீன உறவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதித்ததாக அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 2 அன்று சீன அதிகாரிகளிடமிருந்து டெல்லிஸ் ஒரு பரிசுப் பையை பெற்றதாகவும் நீதிமன்ற தாக்கல்கள் தெரிவிக்கின்றன.