ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என சாடிய இந்திய தூதர் அனுபமா சிங்; யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 62வது அமர்வில், பாகிஸ்தானின் போலிப் பிரச்சாரங்களுக்கு இந்தியாவின் சார்பில் இளம் பெண் தூதர் ஒருவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை ஜம்மு காஷ்மீர் குறித்து எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பதிலளிக்கும் உரிமை மூலம் அவர் முற்றிலும் நிராகரித்தார். பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என்று அவர் சாடிய விடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அனுபமா சிங்
இந்திய தூதர் அனுபமா சிங் யார்?
பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் திணறடித்த அனுபமா சிங், இந்திய வெளியுறவுத் துறையின் 2014ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த ஒரு தொழில்முறை ராஜதந்திரி ஆவார். இவர் கணினி அறிவியல் துறையில் பி.டெக் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஃபைனான்ஸ் பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். தற்போது ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். சர்வதேச மனித உரிமை விவாதங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் துல்லியமாக எடுத்துரைப்பதிலும், எதிரி நாடுகளின் புவிசார் அரசியல் பரப்புரைகளை முறியடிப்பதிலும் இவர் வல்லவராகக் கருதப்படுகிறார்.
பின்னணி
பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என சாடியதன் பின்னணி
ஐநா மேடையில் பேசிய அனுபமா சிங், பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான், தன்னைத் தானே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக் கொள்வது ஒரு பெரிய முரண்பாடு என்று சுட்டிக்காட்டினார். சொந்த நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பயிற்சியளித்து, நிதியுதவி வழங்கி வளர்த்துவிட்டு, தற்போது அதே பயங்கரவாதம் தங்களைத் தாக்கும் போது பாகிஸ்தான் அதிர்ச்சியடைகிறது என்றார். தானே உருவாக்கிய அரக்கனால் அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு பிராங்கென்ஸ்டைன் அரசுக்கு பாகிஸ்தான் மிகச் சிறந்த உதாரணம் என்று அவர் கடுமையாகச் சாடினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலவரம் குறித்து சுட்டிக்காட்டல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் கடுமையான உள்நாட்டு ஒடுக்குமுறைகளையும், ராவலகோட் பகுதியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டையும் இந்தியத் தூதர் ஐநா அவையின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்குள்ள மக்கள் அடிப்படைத் தேவையான உணவு, மின்சாரம் மற்றும் தங்களின் கண்ணியத்தைக் கோரிய போது, அவர்களுக்குப் பாகிஸ்தான் அரசு தோட்டாக்களை மட்டுமே பரிசாக வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். கட்டாய ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையின் விளைவாகவே அங்கு வன்முறை வெடித்துள்ளதாக அவர் வாதிட்டார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் இறுதி எச்சரிக்கை
பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அனுபமா சிங், அண்மையில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 66 ஆண்டுகள் பழமையான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்போதைய பாதுகாப்புச் சூழலுக்குப் பொருந்துவதாக இல்லை என்று அறிவித்தார். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பகுதியும் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளின் எல்லைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, சிதைந்து கிடக்கும் தனது சொந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.