யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை
யூத எதிர்ப்பு குறித்த கருத்துக்களை எலான் மஸ்க் ஆதரித்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ். சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில், ஹிட்லருக்கு ஆதரவான பதிவுகள் இடுபவர்களைத் தாக்கி எக்ஸ் பயனாளர் ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு, மறுமொழியில் யூத எதிர்ப்பு கருத்து ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் மற்றொரு எக்ஸ் பயனாளர். யூத எதிர்ப்பு கருத்து பதிவிட்ட எக்ஸ் பயனாளரின் மறுமொழியை ஆமொதிக்கும் வகையில் மறுமொழி செய்திருக்கிறார் எலான் மஸ்க். குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடும் போது அதனை எதிர்க்காமல், ஆமோதிக்கும் வகையில் பதிவிட்ட எலான் மஸ்க்குக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
எலான் மஸ்க் எக்ஸில் பதிட்ட மறுமொழி:
ஏற்றக் கொள்ள முடியாத ஒன்று:
"அவரது இந்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மற்றும் அமெரிக்கர்களின் அடிப்படை மாண்புகளுக்கு எதிரானது" என்று எலான் மஸ்கின் யூத எதிர்ப்பு கருத்து ஆமோதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர். மேலும், எலான் மஸ்கின் இந்த யூத எதிர்ப்பு ஆமோதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், டிஸ்னி, ஐபிஎம், டிஸ்கவரி, லயன்ஸ் கேட் மற்றும் பாராமவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவங்களில் எக்ஸ் தளத்தில் இனி விளம்பரம் செய்யப்போவதில்லை என அறிவித்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருப்பதோடு, எக்ஸ் தளத்தில் இனி விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.