மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு
சீன ஆராய்ச்சி கப்பலான சியான் யாங் ஹாங் 03, அடுத்த மாத தொடக்கத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உளவு நோக்கங்களுக்காக இந்தியப் பெருங்கடலை மேப்பிங் செய்யும் உளவுக் கப்பலாக சியான் யாங் ஹாங் 03 பார்க்கப்படுகிறது. ஆனால், மாலத்தீவு கடற்பரப்பில் அந்த கப்பல் எந்த ஒரு ஆராய்ச்சியையும் நடத்தாது என்றும், அவசர அழைப்புகளை எதிர்கொள்வதற்காக மட்டுமே அந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் மாலத்தீவு அரசு கூறியுள்ளது. "நட்பு நாடுகளின் கப்பல்களை எப்போதும் வரவேற்கும் இடமாக மாலத்தீவு இருந்து வருகிறது. மேலும் அமைதியான நோக்கங்களுக்காக அவசர அழைப்புகளை ஏற்கும் இராணுவக் கப்பல்களை தொடர்ந்து மாலத்தீவு ஆதரித்து வருகிறது." என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா-மாலத்தீவுக்கு இடையேயான பதட்ட நிலை
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் சேதமடைந்துள்ள நிலையில், சீனாவின் ஆராய்ச்சி கப்பல் குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசினர். அதனைதொடர்ந்து, இந்தியா-மாலத்தீவுக்கு இடையே பதட்ட நிலையில் உருவானது. அதன் பிறகு, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டது. மாலத்தீவு மக்களின் அவசர அழைப்புகளை ஏற்க இந்திய விமானப்படை கப்பல்கள் அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருந்தன.