ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், நேற்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணப்பட்ட அந்த விமானத்தில் இருந்த மேலும் 9 பேரும் உயிரிழந்தனர். இதுபற்றி வாக்னர் படைக்கான அதிகாரபூர்வ டெலிகிராம் சேனல், எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்த விமானம், ட்வெர் பிராந்தியத்தில், வான் பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்தது. ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. ரஷ்யா செய்தி நிறுவனமான TASS, "ட்வெர் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் பயணம் செய்தார் என ரோசாவியாட்சியா (ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம்) கூறியது" என்று தெரிவித்துள்ளது.
யாரந்த பிரிகோஜின்?
ப்ரிகோஜின், ரஷ்யாவின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர். அவர் 1995 முதல், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் துறையில் கோலோச்சிவருபவர். 2014-இல் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தபோது, வாக்னர் குழு என்கிற கிளர்ச்சியாளர்கள் குழுவை நிறுவினார் ப்ரிகோஜின். பிரிகோஜின், கடந்த ஆண்டு, ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் போது ஒரு கூலிப்படை குழுவை ரகசியமாக நிறுவி வழிநடத்தியதாக தெரிவித்தார். ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் போரில் பங்கெடுத்த இக்குழு, திடீர் திருப்பமாக, ரஷ்யாவிற்கு எதிராக, முக்கிய நகரங்களை கைப்பற்றி அந்நாட்டு அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு கட்டத்தில், தலைநகர் மாஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேறியது. தோல்வியில் முடிந்த அந்த கிளர்ச்சிக்கு பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில், ப்ரிகோஜின் பெலாரசுக்கு நாடு கடத்தப்பட்டார் எனக்கூறப்படுகிறது.