11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்?
உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்திலிருந்து 11,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது வோடஃபோன். அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக மார்கரிட்டா டெல்லா வல்லே பதவியேற்ற சில மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பணியாளர்களை கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் வோடபோன். கடந்த சில ஆண்டுகளாகவே அதன் முன்னாள் சிஇஓ நிக் ரீடு தலைமையில் மிகவும் சுமாரான செயல்பாட்டையே கொண்டிருந்தது வோடபோன் நிறுவனம். அவருடைய நான்காண்டு பணிக்காலத்தில் அந்நிறுவனப் பங்குகள் 40% சரிவைச் சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக கடந்த டிசம்பரில் தனது பதவியில் இருந்து விலகினார் நிக் ரீடு. அதனைத் தொடர்ந்தே புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் மார்கரிட்டா டெல்லா வல்லே.
புதிய திட்டங்களுடன் வோடபோன்:
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பணிநீக்கமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருக்கிறது வோடபோன். நிறுவனத்தை எளிமையாக மாற்றுவதற்காகவும், வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான புதிய முயற்சியாவும் இந்த பணிநீக்கத்தை கருதுகிறது அந்நிறுவனம். மேலும், வோடபோன் வரலாற்றிலேயே இத்தனை பேரை பணிநீக்கம் செய்யும் அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல் முறை. வாடிக்கையாளர்கள், வளர்ச்சி மற்றும் எளிமை ஆகியவற்றுக்கே தான் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ. வோடபோன் நிறுவனத்தின் உலகின் முன்னணி சந்தைகளைன ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸபெயின் ஆகிய நாடுகளிலும் சரியான செயல்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இந்த நாடுகளின் தொலைதொடர்பு சந்தைகளில் கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவன சிஇஓ. ஜெர்மனியில் இழந்த இடத்தை மீட்டெடுப்பதே முக்கியக் குறிக்கோள் எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.