'8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல்
நாட்டில் உள்ள பெண்கள் எட்டு குழந்தைகளைப் பெற்று, குடும்பங்களை பெரிய குடுமபங்களாக மாற்றுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார். மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் பேரவையில் உரையாற்றும் போது புதின் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவின் பிறப்பு விகிதம் 1990களில் இருந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, வரவிருக்கும் தசாப்தங்களில் ரஷ்யாவின் மக்கள்தொகையை அதிகரிப்பது தான் நமது இலக்கு என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
'குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம்'
"நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று, வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வந்தது நமது இனக்குழுவாகும். ரஷ்ய குடும்பங்களில், நமது பாட்டி மற்றும் பூட்டிகள் ஏழு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் பெற்றுக்கொண்டனர் என்பதை நினைவில் கொள்வோம். " என்று செவ்வாய்கிழமை(நவம்பர் 28) உரையாற்றும் போது புதின் கூறினார். "இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாப்போம் மற்றும் அதற்கு புத்துயிர் கொடுப்போம். பெரிய குடும்பங்களாக வாழ்வது ரஷ்ய மக்களின் ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வும், ஒழுக்கத்தின் ஆதாரமும் ஆகும்." என்று மேலும் புதின் கூறியுள்ளார்.