LOADING...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார் மச்சாடோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, தனக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசு பதக்கத்தை அதிபர் டிரம்ப்பிடம் மச்சாடோ வழங்கியுள்ளார். வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக டிரம்ப் காட்டி வரும் தனித்துவமான அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இந்த பதக்கத்தை அவருக்கு வழங்கியதாக மச்சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இச்சந்திப்பு குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்ட அதிபர் ட்ரம்ப், மச்சாடோவை ஒரு "அற்புதமான பெண்மணி" என்று பாராட்டியதுடன், அவர் வழங்கிய கௌரவத்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உறுதி 

அதிபர் டிரம்ப் வசம் இருக்கும் நோபல் பரிசு

அந்தப் பதக்கம் தற்போது அதிபரின் வசமே உள்ளது என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக Times Now கூறுகிறது. இருப்பினும், நோபல் கமிட்டியின் விதிகளின்படி, இந்த விருதை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மச்சாடோவின் துணிச்சலை பாராட்டிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், வெனிசுலாவை வழிநடத்தும் மச்சாடோவின் தலைமைப் பண்பு குறித்து ட்ரம்ப் கொண்டுள்ள பழைய நிலைப்பாட்டில் தற்போதைக்கு மாற்றமில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வெனிசுலாவிலிருந்து வெளியேறிய மச்சாடோ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாஷிங்டனில் தோன்றியது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement