யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்: ஈரான் குறிவைத்த அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்! இதன் சிறப்பம்சங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமெரிக்கா, கப்பல் எந்தப் பாதிப்பும் இன்றி முழுத் திறனுடன் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
விவரம்
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் - ஒரு பார்வை
அமெரிக்க ராணுவ வலிமையின் அடையாளமாகக் கருதப்படும் இந்தக் கப்பலின் வியக்கத்தக்க அம்சங்கள் இதோ:- சுமார் 333 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 1 லட்சம் டன்னுக்கு அதிகமான எடையைத் சுமக்கும் திறன் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. இதில் உள்ள இரண்டு அணு உலைகள் 2.60 லட்சம் குதிரைத்திறனை உருவாக்குகின்றன. இந்த அணு உலைகள் ஒருமுறை எரிபொருள் நிரப்பப்பட்டால், தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை இயங்கக்கூடியவை. ஒரே நேரத்தில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவு விமானங்கள் என மொத்தம் 90 விமானங்களை இதில் நிறுத்த முடியும்.
பின்னணி
வரலாற்றுப் பின்னணி
1989 இல் தனது சேவையைத் தொடங்கிய இக்கப்பல், அமெரிக்காவின் பல முக்கியப் போர்களில் பங்கேற்றுள்ளது. குறிப்பாக, 2003 இல் ஈராக் போரின் போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தக் கப்பலில் நின்றபடி "மிஷன் அகாம்பிளிஷ்ட்" என்று அறிவித்தது உலகப் புகழ் பெற்றது.
சூழல்
தற்போதைய சூழல்
தற்போது கேரியர் ஸ்டிரைக் குரூப் 3 இன் தலைமைக்கப்பலாக இது செயல்படுகிறது. இதனுடன் ஏவுகணைத் தாங்கிப் போர்க்கப்பல்கள், அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஒரு சிறிய நாட்டின் ராணுவ வலிமைக்கு இணையான பாதுகாப்பு படை எப்போதும் கூடவே இருக்கும். ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் நவீன ரேடார் மற்றும் தற்காப்பு அமைப்புகள் இந்தக் கப்பலில் உள்ள நிலையில், ஈரானின் இந்தப் புகார் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.