LOADING...
ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்கா, அரபு நாடுகள் மூலமாக ஈரானுக்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது

ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
08:49 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலை முயற்சி நடந்தால் ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுவார்த்தையும் முடங்கிவிடும் என்று அஞ்சிய அமெரிக்கா, அரபு நாடுகள் மூலமாக ஈரானுக்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

முரண்பாடு

அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த முரண்பாடு

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. ஆரம்பத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்த போதிலும், ஏப்ரல் மாதம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியவுடன் இரு நாடுகளின் நோக்கங்களும் மாறின. ஈரானின் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இஸ்ரேல் காய்களை நகர்த்திய வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தூதுக்குழுவினர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்றனர்.

குறி

தப்பியோடிய சபாநாயகர் காலிபாஃப்

அமெரிக்காவின் அழுத்தத்தால் இஸ்ரேலின் இலக்கு பட்டியலிலிருந்து இரு தலைவர்களின் பெயர்களும் தற்காலிகமாக நீக்கப்பட்டாலும், சபாநாயகர் காலிபாஃப் இரண்டு முறை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸுடனான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு காலிபாஃப் திரும்பியபோது, அவரது விமானத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தத் திட்டமிட்டதை ஈரான் உளவுத்துறை கண்டறிந்தது. இதனால் அவரது விமானம் மஷ்ஹத் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அவர் சாலை மார்க்கமாக தெஹ்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

இஸ்ரேல்

பேச்சுவார்த்தையை முடக்க நினைக்கும் இஸ்ரேல்

ஏற்கனவே ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி ஆகியோர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதால் அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருந்தது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒரு ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டின. இந்த உடன்பாடு தங்களின் போர் நோக்கங்களை சிதைப்பதாக கூறி இஸ்ரேல் இதனை கடுமையாக எதிர்த்த நிலையில், பேச்சுவார்த்தையைத் தக்கவைக்க அமெரிக்கா ஈரானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது.

Advertisement