அடுத்தாண்டு முதல் மாற்றமடையும் அமெரிக்க விசா: காகிதமில்லை, முத்திரை இல்லை, இன்னும் பல
"காகிதமற்ற விசா" வழங்குவதற்கான பைலட் திட்டத்தை அமெரிக்க அரசு வெற்றிகரமாக முடித்திருப்பதால், விரைவில் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் பக்கங்களில் முத்திரையிடப்பட்ட அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அமெரிக்க விசாக்கள் விரைவில் மாற்றப்படும் என்று விசா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்கா சமீபத்தில், டப்ளினில் உள்ள அதன் தூதரகப் பணியில், இந்த திட்டத்தின் சோதனை ஓட்டத்தை நிறைவுசெய்தது. அது வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதை படிப்படியாக விரிவுபடுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் இந்த சேவை முழுவதுமாக செயல்பட 18 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே இதை பயிற்சித்து பார்த்துள்ளனர். எனினும், இந்தியா போன்ற நாடுகள் டூரிஸ்டுகளுக்கு வழங்கும் இ-விசா போன்றது இல்லை இது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
செயலி மூலம் அறிமுகப்படுத்த திட்டம்
இது குறித்து பேசிய விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளர், ஜூலி ஸ்டஃப்ட், "இதைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கு எங்களுக்கு 18 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஆனால், இந்த முதல் படியை நாங்கள் எடுத்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த பைலட் ஓட்டத்தில், குடியேற்ற விசாக்களை தேர்வு செய்து முயற்சி செய்தோம்" "எதிர்காலத்தில், வேறு சில நாடுகளைப் போலவே, ஒரு செயலி போன்றதொன்றை கொண்டு மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள ஸ்டாம்ப் போட தேவை இல்லாமல், தங்கள் விசா நிலையைக் காட்ட அனுமதிக்கும். நாங்கள் அதைப் நடைமுறை படுத்துவதை எண்ணி மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.