'போரை தொடர்வதற்கு எங்களிடம் பணம் இருக்கிறது': ஈரானை மிரட்டும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான போர் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான "ஏராளமான பணம்" அமெரிக்க அரசிடம் உள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். இந்த போருக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 'மீட் தி பிரஸ்' நிகழ்ச்சியில் பேசிய பெசென்ட், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் காலக்கட்டத்தைப் போலவே தற்போதும் ராணுவத்தை பலப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், கூடுதல் நிதி மூலம் ராணுவ தேவைகள் தடையின்றி பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார். ஈரான் போருக்காக சுமார் 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை அமெரிக்க ராணுவம் கோரியுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு நடுவே அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.
உத்திகள்
எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதார உத்திகள்
ஈரான் மற்றும் ரஷ்யா மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தளர்த்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை பெசென்ட் ஆதரித்து பேசினார். இதன் மூலம் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெயை வாங்க முடியும் என்றும், இது உலகச் சந்தையில் எண்ணெய் விலை பேரலுக்கு 150 டாலராக உயர்வதை தடுக்கும் என்றும் அவர் விளக்கினார். இதன் மூலம் ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு செல்லும் வருவாயை குறைக்க முடியும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும்.
அடுத்தகட்ட நகர்வுகள்
ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அமெரிக்கா
ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், பதிலுக்குப் பிராந்தியத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்குவோம் என ஈரான் மிரட்டியுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களை விட இது அமெரிக்காவிற்கு அதிகச் செலவு பிடிக்கும் போராக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ள போதிலும், அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளில் பின்வாங்கப் போவதில்லை என்பதையே அமைச்சரின் உரை உணர்த்துகிறது.