LOADING...
அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாதா? டிரம்பின் தடையை சுக்குநூறாக்கிய உச்ச நீதிமன்றம்
அமெரிக்க மண்ணில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையை பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்

அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாதா? டிரம்பின் தடையை சுக்குநூறாக்கிய உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
08:36 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க 6-3 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு, அமெரிக்காவில் வசிக்கும் 50 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கும், குறிப்பாக H-1B விசாவில் அங்கு பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

குடியுரிமை

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்குமா?

அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, அமெரிக்க மண்ணில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையை பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். டிரம்பின் நிர்வாக உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், தற்போதைய சட்டப்படி, பெற்றோர்கள் H-1B விசா தாரர்களாகவோ, மாணவர் விசா (F-1) வைத்திருப்பவர்களாகவோ அல்லது தற்காலிக விசாக்களில் இருப்பவர்களாகவோ இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை தடையின்றித் தொடரும்.

பெற்றோர் நிலை

குழந்தையின் குடியுரிமை பெற்றோருக்கு பொருந்துமா?

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்குத் தானாகவே குடியுரிமை கிடைத்தாலும், அதன் மூலம் பெற்றோருக்கு எந்தவொரு கூடுதல் சலுகையோ அல்லது குடியுரிமையோ உடனடியாகக் கிடைக்காது. H-1B அல்லது இதர தற்காலிக விசாக்களில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது சட்டபூர்வமான விசா தகுதியை தங்களின் சொந்த உழைப்பு மற்றும் நிறுவனங்களின் மூலமாக தான் தனிப்பட்ட முறையில் பராமரிக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒரு குழந்தை, தனது பெற்றோருக்கு நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அல்லது ஸ்பான்சர் செய்ய வேண்டுமானால், அந்தப் பிள்ளைக்கு 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

Advertisement