நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்
9 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெறிமுறை நடத்தையை நிர்வகிக்கும் நெறிமுறைக் குறியீட்டு விதிகளை திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. "நீதிமன்ற உறுப்பினர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை சுருக்கமாக அமைக்க" இந்த நெறிமுறைக் குறியீட்டு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு அறிமுக அறிக்கையில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளை தவிர, அமெரிக்காவில் உள்ள அனைத்து நீதித்துறை உறுப்பினர்களுக்கும் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை தீர்மானிக்கும் விதிகள் உள்ளன. அதனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளும் நீண்ட காலமாக எந்த பிணைப்பு நெறிமுறைக் குறியீடும் இல்லாமல் செயல்பட்டனர்.
விமர்சனங்களுக்கு ஆளான அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. "சமீபத்திய ஆண்டுகளில் இந்த நாட்டில் உள்ள மற்ற நீதிபதிகளைப் போலல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள், எந்த நெறிமுறை விதிகளாலும் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்பது போல் செயல்படுவதாக தவறான புரிதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தவறான புரிதலை அகற்ற, நாங்கள் இந்த குறியீட்டை வெளியிடுகிறோம்." என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனியார் ஜெட் விமானங்களில் பயணிப்பது, சொகுசு விடுமுறைகளுக்கு செல்வது, ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவது போன்ற பல விமர்சனங்களுக்கு ஆளானதை அடுத்து இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.