அமெரிக்காவில் குடியேறிகளுக்கு அதிர்ச்சி: 'கிரீன் கார்டு' பெற SNAP, Medicaid பயன்படுத்தினால் ஆபத்து?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய குடியேற்ற விதியை முன்மொழிந்துள்ளது. இந்த விதி, முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கையை நீக்கி, மீண்டும் ஒரு கடுமையான விதியை நடைமுறைப்படுத்தவுள்ளது. குடியேறிகள், அரசின் சமூக நலத்திட்டங்களான SNAP (உணவு உதவி), Medicaid (மருத்துவக் காப்பீடு) போன்றவற்றை பயன்படுத்தியிருந்தால், அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பங்களை நிராகரிக்க இந்த புதிய விதி வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, அரசின் திட்டங்கள் மட்டுமின்றி, மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவிகளும் இனிமேல் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும்.
நோக்கம்
புதிய விதியின் நோக்கம்
வெளிநாட்டினர், அமெரிக்காவில் சொந்தமாக பிழைத்து வாழ வேண்டும் என்றும், அரசு சலுகைகள் குடியேற்றத்திற்கு ஊக்கமளிக்கக் கூடாது என்றும் இந்த விதியை வெளியிட்ட உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. இதன் மூலம் குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிகபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கும். இருப்பினும், இந்த விதியானது தகுதிவாய்ந்த, ஏழை குடியேறிகள் கூட தங்களுக்கு தேவையான, தகுதியான நலத்திட்டங்களை பயன்படுத்த அஞ்சும் ஒரு சூழலை உருவாக்கும் என்று விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த புதிய முன்மொழிவு தற்போதைய அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.