Loading...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய சுங்க வரி விதிப்பு: 25 மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
சுங்க வரிகளுக்கு எதிராக 25 அமெரிக்க மாநிலங்கள் ஒன்றுதிரண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய சுங்க வரி விதிப்பு: 25 மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2026
08:15 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய இறக்குமதி சுங்க வரிகளுக்கு எதிராக 25 அமெரிக்க மாநிலங்கள் ஒன்றுதிரண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சொந்த நாட்டின் அதிபர் மீதே மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது உலகளாவிய வர்த்தகத் துறையிலும் அமெரிக்க அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தகத்திற்கான அமெரிக்க நீதிமன்றத்தில் ஆரேகான், நியூயார்க் உள்ளிட்ட 25 மாநிலங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் விதித்தது. இந்த நடவடிக்கை அதிபரின் சட்ட வரம்பை தாண்டிய செயல் என மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

விவரங்கள்

கட்டாய உழைப்பு விவகாரமும் தளர்வுகளும்

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதியை தடுக்க தவறிய நாடுகளை இலக்காக கொண்டே இந்த வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியாவுக்கான வரி விகிதம் 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து பிரிவு 122-இன் கீழ் தற்காலிக வரிகளை அவர் விதித்த போதிலும், அதற்கும் வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் காரணத்தினாலேயே, தற்போது பிரிவு 301 என்ற புதிய சட்டப் பிரிவை ஆயுதமாகப் பயன்படுத்தித் தனது வரி விதிப்புக் கொள்கையை டிரம்ப் நிலைநிறுத்த முயல்கிறார்.

பொருளாதார சவால்

பொருளாதார சவால்களும் சட்டப் போராட்டமும்

நீதிமன்றப் பின்னடைவுகளை சந்தித்தபோதிலும், அமெரிக்க உற்பத்தியை பெருக்குவதற்கும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கும் சுங்க வரிகளையே முதன்மை ஆயுதமாக டிரம்ப் கருதுகிறார்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்து மீண்டும் பரவலான வரிகளைத் திணிப்பது அமெரிக்க தொழிலாளர்களுக்கும் வணிகங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இப்புதிய சட்டப் போராட்டம் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் மீண்டும் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT