கடைசி நிமிடத்தில் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்: போர் பதற்றத்தின் புதிய பின்னணி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வளைகுடா நாட்டுத் தலைவர்களின் ஆலோசனையின்படி இந்தத் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை
டிரம்பின் எச்சரிக்கையும், ஒத்திவைப்பும்
எனினும்,"ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையுடன் கூடிய உடன்பாடு எட்டப்பட வேண்டும். திருப்திகரமான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஈரான் மீது முழு அளவிலான மிகப்பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக இருக்க வேண்டும்" என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ராணுவ தளபதிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஈரானின் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா எந்தவொரு "வூக உத்தி ரீதியான தவறான கணக்கீட்டையும்" செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். ஈரானிய ராணுவப் படைகள் எப்போதும் 'துப்பாக்கியின் விசையில் விரலை வைத்தபடி' முன்பை விட அதிக பலத்துடன் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
அமைதிப் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியேயான கடல்சார் போக்குவரத்தைச் சீரமைக்கவும் புதிய அமைதி ஒப்பந்த முன்மொழிவை ஈரான் அனுப்பியுள்ளது. அதன்படி, பேச்சுவார்த்தை காலத்தில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியில், கால் பகுதியை விடுவிக்க அமெரிக்கா நெகிழ்வுத்தன்மை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் இலக்குகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதால், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.