'தலைமை தகர்க்கப்படும்': ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த இறுதி கெடு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய தலைமையை தகர்க்கும் பிரம்மாண்டமான ராணுவ தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, அந்நாட்டிற்கு ஒரு "கடைசி வாய்ப்பு" வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திங்கள்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் இரு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். முதற்கட்டமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கிய காரணியாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறப்பது குறித்தும், இரண்டாவது கட்டமாக ஈரானின் அணுசக்தி திட்டங்களை முழுமையாக முடக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்தியஸ்தம்
வளைகுடா நாடுகளின் மத்தியஸ்தம்
சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே, திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக தள்ளிவைத்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளித்துள்ளதாக டிரம்ப் கூறினார்.
ஈரான் அணுஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அதேவேளையில், அமெரிக்காவுடன் தாங்கள் நேரடியாக எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வது தொடர்பாக ஓமன் நாட்டினோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் ஈரானின் மீதான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்ற டிரம்பின் கடுமையான எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.