ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சுமார் 1.8 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை சுமந்து சென்ற 40 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக வழிநடத்திக் கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்கள்
ஹார்முஸ் நீரிணையில் வீரியமடையும் தாக்குதல்கள்
உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சி செய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போரின் போது, ஹார்முஸ் நீரிணையை சுற்றியுள்ள ஈரானின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உட்பட சுமார் 60 ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் தகர்த்தன.
வான், கடல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை முறியடித்து வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா முழு பாதுகாப்பு அளித்தது.
ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் கருத்து
ஈரானின் ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டதால், கப்பல்களின் நகர்வுகளை ஈரானால் கண்காணிக்க முடியாது என்றும், ஹார்முஸ் நீரிணையை தனது முழு கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஈரான் தனது ராணுவ பலத்தை மீண்டும் கட்டமைத்து வருவதால், தொடர்ந்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா வெற்றிகரமாக 40 கப்பல்களைக் கடத்திய போதிலும், இப்போருக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாது என்பதால் கப்பல் நிறுவனங்கள் இன்னும் தயக்கத்திலேயே உள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை இயக்குவதற்கான வாடகைத் தொகை ஒரு நாளைக்கு $5,00,000 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மேலும், இன்சூரன்ஸ் கட்டண உயர்வும், தாக்குதல்கள் குறித்த பயமும் சர்வதேச அளவில் எரிபொருள் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.