LOADING...
டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்
ஈரானிய தூதுக்குழுவினர் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்ததால் இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது

டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
06:45 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானிய தூதுக்குழுவினர் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்ததால் இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

வெளிநடப்பு

லெபனான் விவகாரமும் ஈரானின் வெளிநடப்பும்

லெபனானில் நிலவும் சூழல் மற்றும் அங்குள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பின் மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கடுமையான கருத்துகளே இந்தத் தற்காலிக முறிவுக்கு காரணமாகும். ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் குறித்து இரு தரப்பும் விவாதித்துக் கொண்டிருந்த போது, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழுவினர் அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளியேறினர். லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே பிற விவகாரங்கள் குறித்து பேச முடியும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விளக்கம்

ஜே.டி.வென்ஸின் ராஜதந்திர விளக்கம்

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், இது போன்ற உயர்மட்ட சர்வதேச ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவது இயல்பானதுதான் என்று குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும், ஈரானுடனான உறவை மேம்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

இஸ்ரேல்

இஸ்ரேலின் தொடரும் பிடிவாதம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் நேரடியாக பங்கேற்கவில்லை. ஜெருசலேமில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களின் எல்லைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு லெபனானில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தை எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலம் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க போவதாகக் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் இரு தரப்பு பிரதிநிதிகளும் கூட்டாக புகைப்படம் எடுப்பதையோ அல்லது கூட்டு ஊடக அறிக்கைகளை வெளியிடுவதையோ தவிர்த்துள்ளனர். இருப்பினும், இந்த விரிசல்களுக்கு மத்தியிலும் விரிவானதொரு பிராந்திய அமைதித் தீர்வை எட்ட இரு நாடுகளும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை வகுக்க தொடர்ந்து முயன்று வருகின்றன.

Advertisement