LOADING...
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: சிரிப் துறைமுகத் தாக்குதலுக்கு ஐஆர்ஜிசி பதிலடி; முழு விபரம்
சிரிப் துறைமுகத் தாக்குதலுக்கு ஐஆர்ஜிசி பதிலடி

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: சிரிப் துறைமுகத் தாக்குதலுக்கு ஐஆர்ஜிசி பதிலடி; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
07:44 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல் வெடித்துள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிப் துறைமுகத்தின் அருகே அமைந்திருந்த கடலோர கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாங்கள் சனிக்கிழமை (ஜூன் 27) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் ஐஆர்ஜிசி படை அறிவித்துள்ளது.

பரஸ்பர குற்றச்சாட்டு

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டு

கடந்த வாரம் தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய இந்தத் திடீர் மோதல் காரணமாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் தான், அதற்கு பதிலடியாகத் தாங்கள் சிரிப் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் திருப்பங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய வழித்தடத்தில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

வன்முறைக்கு வன்முறையே பதில் என அமெரிக்கத் துணை அதிபர் எச்சரிக்கை

இந்த விவகாரம் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை முழுமையாக மதித்து நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஈரானுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்க வேண்டுமே தவிர, வன்முறையைக் கையாண்டிருக்கக் கூடாது என்றும், இத்தகைய வன்முறை செயல்களுக்கு பலத்த வன்முறையே பதிலாகக் கொடுக்கப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பஹ்ரைன்

பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்

அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைத் தளம் அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, தங்களது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. பிராந்திய அமைதியை நிலைநாட்ட சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையிலும், ஈரான் நிர்வாகம் தொடர்ந்து அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள பஹ்ரைன், தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு முழு உரிமை உள்ளதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

Advertisement

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கமும் அமெரிக்காவின் பாதுகாப்பும்

உலகளவில் நுகரப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி எரிவாயு விநியோகத்தில் சுமார் 5 இல் 1 பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்தச் சூழலில், தங்கள் பகுதி வழியாக செல்லும் கப்பல்கள் ஈரானின் வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்புத் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக, வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர், கப்பல்களின் தடையற்ற போக்குவரத்திற்குத் தங்களது கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு வழங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை

பதற்றத்திற்கு மத்தியிலும் சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை

ராணுவ ரீதியான மோதல்கள் மற்றும் பதற்றங்கள் ஒருபுறம் நீடித்தாலும், சர்வதேச எரிசக்திச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 3 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சவுதி அராம்கோவின் ராஸ் தனூரா முனையத்தின் மூலமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் உரம் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளதால், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை அபாயம் சற்றே குறைந்துள்ளது.

Advertisement