LOADING...
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் தயாராவதாக தகவல்
ஒரு நிரந்தர தீர்வை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் தயாராவதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2026
08:26 am

செய்தி முன்னோட்டம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 21-ம் தேதியுடன் தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் ஒரு நிரந்தர தீர்வை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் பிரதிநிதிகள் இரண்டாவது முறையாகச் சந்திப்பதற்கான இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக ஜெனிவா அல்லது இஸ்தான்புல் ஆகிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன.

நிபந்தனை

அமெரிக்காவின் விட்டுக்கொடுக்காத நிபந்தனைகள்

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும், ஈரான் முன் அமெரிக்கா சில கடினமான நிபந்தனைகளை வைத்துள்ளது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும், கடந்த ஜூன் மாதம் நடந்த குண்டுவீச்சில் சேதமடைந்த அணு உலைகளை அகற்ற வேண்டும் மற்றும் பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் ஆகியவையே அந்த நிபந்தனைகள். இதற்குப் பதிலாக, 20 ஆண்டுகள் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தினால் சில சலுகைகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியும் போர்நிறுத்த நீட்டிப்பும்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது ஈரானை பேச்சுவார்த்தைக்கு இழுப்பதற்கான ஒரு தந்திரமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், நீடித்தப் போர் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை அமெரிக்க நிர்வாகத்திற்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், பேச்சுவார்த்தை சுமூகமாக தொடரும் பட்சத்தில் ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேலேயும் போர்நிறுத்தக் காலத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் அனைத்தும் இந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றன.

Advertisement