LOADING...
அமெரிக்கா -ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு: $6 பில்லியன் நிதியை விடுவிக்க ஒப்புதல்; ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய விதிகள்?
உடன்படிக்கையை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன

அமெரிக்கா -ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு: $6 பில்லியன் நிதியை விடுவிக்க ஒப்புதல்; ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய விதிகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2026
08:05 am

செய்தி முன்னோட்டம்

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தை புதன்கிழமையன்று நிறைவடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன. எனினும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. ஈரானிய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, இந்த சுற்று பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நகர்வாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 6 பில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதி, ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்காக பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த மீறல்களைக் கண்காணிக்கத் தனித் தொடர்பு சேனல் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தடையின்றி திறந்து வைப்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா சலுகைக்காலம் வரும் ஆகஸ்ட் பாதியில் முடிவடைய உள்ள நிலையில், அதன் பிறகு வணிக கப்பல்களுக்கு கட்டணம் (Tolls) வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நல்ல திசையில் நகர்வதாக தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

கமேனி இறுதிச்சடங்கிற்கு பின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தனித்தனி அறைகளில் இந்த மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கு வரும் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன் பின்னரே இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement