LOADING...
அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!
Automatic Extension முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது

அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கான பணி அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents - EADs) தானியங்கி நீட்டிப்பு முறையை (Automatic Extension) முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை (Department of Homeland Security - DHS) அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது, அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக H-4 விசா வைத்திருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள் என்ன? 

அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்கு பிறகு EAD புதுப்பித்தலுக்கு (Renewal) விண்ணப்பிக்கும் குடியேற்ற தொழிலாளர்களுக்கு, அவர்களின் விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது இனிமேல் தானியங்கி பணி நீட்டிப்பு வழங்கப்படாது. முந்தைய நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்தத் தானியங்கி நீட்டிப்பு நீக்கப்படுவதன் மூலம், வேலை அனுமதி நீட்டிக்கப்படுவதற்கு முன்பு, விண்ணப்பதாரர்களின் பின்னணிச் சரிபார்ப்பும் (Vetting and Screening), கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆய்வும் முழுமையாக நடத்தப்படும் என DHS தெரிவித்துள்ளது. இதனால், EAD புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் செயல்முறையில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணி அனுமதி காலாவதியான பிறகு வேலையைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.

பாதிப்பு

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

இந்த புதிய விதிமுறையால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது H-1B போன்ற முக்கிய விசாக்களில் உள்ளவர்கள் நேரடியாகபாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், பின்வரும் பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: H-4 விசாதாரர்கள்: H-1B விசா வைத்திருப்பவர்களின் துணைகளான H-4 விசாதாரர்கள். OPT மாணவர்கள்: Optional Practical Training (OPT) திட்டத்தின் கீழ் உள்ள F-1 மாணவர்கள். அகதிகள்: நிலுவையில் உள்ள புகலிட விண்ணப்பதாரர்கள் (Pending Asylum Applicants). பணி அனுமதி இடைவெளியை தவிர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் தற்போதைய EAD காலாவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன்னதாகவே புதுப்பித்தல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என USCIS அறிவுறுத்தியுள்ளது. அக்டோபர் 30, 2025-க்கு முன் தானாகவே நீட்டிக்கப்பட்ட EADகள் இந்த விதியால் பாதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.