Loading...
அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி: OPT பணி வாய்ப்பிற்கு $70,000 கட்டணம் விதிக்க திட்டம்
OPT பணி வாய்ப்பிற்கு $70,000 கட்டணம் விதிக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி: OPT பணி வாய்ப்பிற்கு $70,000 கட்டணம் விதிக்க திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
10:05 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் சர்வதேச மாணவர்கள் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றுவதற்கான விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்திற்குப் புதிய கட்டணங்களை விதிக்க அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு சர்வதேச மாணவர் முதன்முறையாக OPT பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென்றால், அவர் பயிலும் கல்வி நிறுவனம் $70,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹58 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும், இந்த அனுமதியை அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்பிப்பதற்கு $30,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு

விசா முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணியாற்ற தற்போதைய விதிகள் அனுமதி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கட்டண விதிப்பு குறித்து பேசிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், "OPT திட்டம் என்பது அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான பின்வாசல் வழியல்ல. விசா விதிகளில் நடக்கும் மோசடிகள் மற்றும் 'பணத்திற்கு விசா' முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

பின்னடைவு

இந்திய மாணவர்களுக்குப் பின்னடைவு

2024-25 கல்வியாண்டில் 3.63 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுடன் அமெரிக்காவிற்கு அதிக மாணவர்களை அனுப்பும் முதன்மை நாடாக இந்தியா திகழ்கிறது.

தற்போதைய தரவுகளின்படி வெளிநாட்டு மாணவர்களின் வருகை ஏற்கனவே குறைந்து வரும் சூழலில், இந்த புதிய விதிமுறையானது இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவுக்கு பெரும் அடியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

இப்பரிந்துரை மீது பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT