Loading...
அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்; பதிலடி தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு
அமெரிக்க தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு

அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்; பதிலடி தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
07:20 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது. கடந்த இரு தினங்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை (IRGC), பிராந்தியக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை கப்பல் மீது இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், அமெரிக்க கடற்படை இந்த தாக்குதல்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தது என்றும், அமெரிக்க வீரர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் CENTCOM தெரிவித்துள்ளது.

தாக்குதல்

5 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஈரானின் இந்த தோல்வியடைந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, IRGC அமைப்பின் கள்ளச்சந்தை எண்ணெய் கடத்தல் வலையமைப்போடு தொடர்புடைய 5 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

தாக்குதலில் ஓமன் வளைகுடாவில் பயணித்த M/T Kaviz, M/T Charminar, M/T Horizon 1, M/T Riesco மற்றும் ஈரானின் கார்க் தீவு அருகே இருந்த M/T Derya ஆகிய 5 கப்பல்கள் தாக்கப்பட்டன.

தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகக் கப்பலில் இருந்த பணியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் எச்சரித்தன.

இதனால் உயிர்ச்சேதம் ஏதும் இன்றி கப்பல்கள் மட்டும் முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டன.

எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் எச்சரிக்கை

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, "அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கம் முயலும் ஒவ்வொரு முறையும், அதன் எண்ணெய் கப்பல்களை இழக்க நேரிடும்" என மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே செப்டம்பர் 5 அன்று ஈரானின் 3 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 5 கப்பல்கள் அழிக்கப்பட்டிருப்பது உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திலும், ஓமன் வளைகுடா பகுதியிலும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT