LOADING...
அமெரிக்காவில் $100,000 H-1B விசா கட்டணம் ரத்து செய்த நீதிமன்றம்; இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றி
எச்-1பி விசா கட்டண உயர்வை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

அமெரிக்காவில் $100,000 H-1B விசா கட்டணம் ரத்து செய்த நீதிமன்றம்; இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2026
06:42 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு விதித்திருந்த 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹83 லட்சம்) என்ற பிரம்மாண்ட கட்டண உயர்வை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி தீர்ப்பு, அங்கு பணிபுரியும் மற்றும் குடியேறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) வல்லுநர்களுக்கும், அமெரிக்க முன்னணி நிறுவனங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

பின்னணி

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

கடந்த ஆண்டு, புதிய H-1B விசாக்களுக்கு 100,000 டாலர் கூடுதல் கட்டணம் விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு முன்பாக நிறுவனங்கள் ஒரு விசாவுக்கு சராசரியாக 2,000 முதல் 5,000 டாலர் மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வந்தன. இந்த கட்டண உயர்வை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பாஸ்டன் நீதிமன்றம்,"அதிபர் டிரம்ப் விதித்துள்ள இந்த 100,000 டாலர் கட்டணம் என்பது ஒரு 'கட்டணம்' அல்ல, அது ஒரு மறைமுக 'வரி' ஆகும். அமெரிக்க அரசியலமைப்பின் படி, புதிய வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிபர் தன்னிச்சையாக இவ்வளவு பெரிய தொகையை வரியாக விதிக்க முடியாது. எனவே, இந்த உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் செல்லாது."

புள்ளிவிவரங்கள்

திடீரென முடங்கிய விசாக்கள்: புள்ளிவிவரங்கள்

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி கட்டண உயர்வு காரணமாக, கடந்த சில மாதங்களாக அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதைக் கடுமையாகக் குறைத்துக் கொண்டன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, பிப்ரவரி 15 வரை நாடு முழுவதும் வெறும் 85 விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த 100,000 டாலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, ஆப்பிள் போன்ற பெரும் நிறுவனங்களை விட, தகுதிவாய்ந்த ஊழியர்களை நம்பியிருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களையும், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களையும் மிகக் கடுமையாகப் பாதித்தது.

Advertisement

முக்கியத்துவம்

இந்தியர்களுக்கு இது ஏன் மிக முக்கியமானது?

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியும் உயர் தகுதி வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் இந்தியர்கள்தான். தற்போது அமெரிக்காவில் சுமார் 7.3 லட்சம் பேர் H-1B விசா மூலம் வசித்து வருகின்றனர். இவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் 5.5 லட்சம் பேரும் அங்கு உள்ளனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், பழைய கட்டண முறையே மீண்டும் அமலுக்கு வருகிறது. டிரம்ப் நிர்வாகம் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு இந்திய ஐடி ஊழியர்களின் "அமெரிக்கா கனவு" தடையின்றித் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement