அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் பேரன் நிலம் மீட்பு: 30 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் மறைந்த பேரனான கனு காந்திக்குச் சொந்தமான அறக்கட்டளையின் 30 ஏக்கர் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்த அமெரிக்க நபரை, உடனடியாக அங்கிருந்து வெளியேறி நிலத்தை ஒப்படைக்குமாறு அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விர்ஜீனியாவின் வாரன் கவுண்டியில் உள்ள ஷெனாண்டோ தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள இந்த மதிப்புமிக்க நிலத்தை, கிரிகோரி பிளாக் என்ற உள்ளூர் நபர் தவறான உரிமை கோரி சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
விர்ஜீனியா நிலம்
காந்தி குடும்பத்து அறக்கட்டளை
அமெரிக்காவின் பிரபல எம்ஐடி (MIT) கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்று, நாசா (NASA) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் விமான வடிவமைப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் கனு காந்தி.
இந்தியா திரும்பிய அவர் கடந்த 2016 நவம்பரில் தனது 87-வது வயதில் காலமானார். குழந்தைகள் இல்லாத காரணத்தால், அவரது மறைவுக்குப் பின் அமெரிக்க நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் அவரது மனைவி டாக்டர் சிவா காந்திக்குச் சென்றன.
பின்னர் 2020-ல் சிவா காந்தியின் மறைவுக்குப் பிறகு, அவர் நிறுவிய டாக்டர் சிவா மற்றும் கனு ராம்தாஸ் மோகன்தாஸ் காந்தி அறக்கட்டளைக்கு அந்தச் சொத்துகள் சென்றடைந்தன.
சூரத்தைச் சேர்ந்த பரிமல் தேசாய் என்பவர் தற்போது இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகச் செயல்பட்டு வருகிறார்.
நீதிமன்ற உத்தரவு
ஆக்கிரமிப்பு உரிமை கோரல்
2024-ல் அமெரிக்காவில் நிலத்தை அளவீடு செய்த பரிமல் தேசாய்க்கு, கிரிகோரி பிளாக் என்பவரிடமிருந்து சட்ட நோட்டீஸ் வந்தது.
விர்ஜீனியாவின் சட்டப்படி 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தால் நிலத்தின் உரிமையைக் கோரலாம் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, 2008 முதல் அந்நிலம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக பிளாக் உரிமை கோரினார்.
இதை எதிர்த்து வாரன் கவுண்டி சர்க்யூட் நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டேரில் எல். ஃபங்க், பிளாக்கின் வாதங்களை நிராகரித்து அறக்கட்டளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.
நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 30 நாட்களுக்குள் சொந்தச் செலவில் அகற்றிவிட்டு நிலத்தை ஒப்படைக்கவும், நீதிமன்றக் கட்டணமாக $11,375 டாலர்களைச் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.