டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இந்த நடவடிக்கைகளை, சட்டவிரோதமானது மற்றும் தீங்கு விளைவிப்பது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர். இது அமெரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் டெபோரா ராஸ், மார்க் வீசி மற்றும் இந்திய அமெரிக்க எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீர்மானம், ஆகஸ்ட் 27, 2025 அன்று இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25% சுங்க வரியைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறது.
வரி விதிப்பு
இந்தியா மீதான அமெரிக்காவின் தற்போதைய வரி
முன்னர் விதிக்கப்பட்ட வரிகளுடன் சேர்த்து, இந்த நடவடிக்கை சர்வதேச அவசரகாலப் பொருளாதாரச் சட்டத்தின் கீழ் பல இந்தியப் பொருட்களுக்கு மொத்த வரியை 50% ஆக உயர்த்தியுள்ளது. இந்தியாவிலிருந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்த வரிகளை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முதலில் விதித்தது. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர். வட கரோலினா பொருளாதாரம் இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் துடிப்பான இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று ராஸ் குறிப்பிட்டார். வீசி இந்த வரிகளை சாதாரண வட டெக்சாஸ் மக்கள் மீது விதிக்கப்படும் வரி என்று விவரித்தார்.
கிருஷ்ணமூர்த்தி
இந்திய வம்சாவளி எம்பி கிருஷ்ணமூர்த்தி கருத்து
கிருஷ்ணமூர்த்தி, இந்த வரிகள் எதிர்விளைவுடையவை, விநியோகச் சங்கிலிகளைத் துண்டிக்கின்றன, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன, மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன என்று கூறினார். இந்த வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா-இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டுறவை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார். டிரம்பின் தன்னிச்சையான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சவால் விடுக்கும் மற்றும் இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.