Work From Home மறுப்பால் குழந்தை உயிரிழப்பு! அமெரிக்க நிறுவனத்திற்கு ₹210 கோடி அபராதம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியருக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' (WFH) வழங்க மறுத்ததால் அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு 22.5 மில்லியன் டாலர் (சுமார் ₹210 கோடி) அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. செல்சி வால்ஷ் என்ற பெண்மணி TQL என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2021 ஆம் ஆண்டு அவர் 21 வாரக் கர்ப்பிணியாக இருந்தபோது, அது ஒரு 'ஹை-ரிஸ்க்' (High-risk) கர்ப்பம் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மேலும், அவர் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
நிராகரிப்பு
வீட்டிலிருந்து வேலை செய்யும் கோரிக்கை நிராகரிப்பு
இதனை ஏற்று செல்சி தனது நிறுவனத்திடம் பிப்ரவரி 15 ஆம் தேதி 'வொர்க் ப்ரம் ஹோம்' அனுமதி கோரினார். ஆனால், நிறுவனம் அதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. "ஒன்று அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யவும், அல்லது சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொள்ளவும்" என அந்நிறுவனம் கட்டாயப்படுத்தியது. சம்பளம் மற்றும் மருத்துவக் காப்பீடு பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி செல்சி மூன்று நாட்கள் அலுவலகம் சென்றார். பிறகு பிப்ரவரி 24 ஆம் தேதி நிறுவனம் ஒருவழியாக அனுமதி வழங்கியது. ஆனால், அதே நாளில் அவருக்குக் குறைப்பிரசவம் ஏற்பட்டது. பிறந்த அவரது மகள் 'மெக்னோலியா', தாயின் அரவணைப்பிலேயே வெறும் 90 நிமிடங்கள் மட்டும் உயிர் வாழ்ந்துவிட்டுப் பிரிந்தார்.
தீர்ப்பு
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த ஹாமில்டன் கவுண்டி நீதிமன்ற ஜூரிகள், குழந்தையின் இறப்பிற்கு அந்நிறுவனத்தின் பிடிவாதமே 90% காரணம் என்று முடிவு செய்தனர். முதலில் 25 மில்லியன் டாலராக இருந்த அபராதம், பிறகு 22.5 மில்லியன் டாலராக (சுமார் ₹210.51 கோடி) இறுதி செய்யப்பட்டது. "ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நியாயமான மருத்துவக் கோரிக்கையை நிராகரித்தது மனிதாபிமானமற்ற செயல். இது ஒரு இளம் குடும்பத்திற்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு" எனத் தெரிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான TQL (வருமானம் ₹50,000 கோடிக்கும் மேல்), இந்தத் தீர்ப்புக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது.