
H-1B விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வழக்கு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உயர்த்தியதற்கு எதிராக, அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (U.S. Chamber of Commerce) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வு, அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும், சட்டவிரோதமானது என்றும் சம்மேளனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வாதங்கள்
சம்மேளனத்தின் முக்கிய வாதங்கள் என்ன?
விசா கட்டணங்கள், விண்ணப்பங்களைச் செயல்படுத்த அரசுக்கு ஆகும் நிஜ செலவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சட்டம் (INA) கூறுகிறது. கட்டணத்தை $100,000 ஆக உயர்த்துவது, ஒரு சட்டவிரோத வரி விதிப்பு என்று சம்மேளனம் வாதிடுகிறது. இந்த விசா கட்டண உயர்வை அதிபர் டிரம்ப், காங்கிரஸின் ஒப்புதல் இன்றி, தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி விதித்துள்ளார். இது சட்டமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு முரணானது என்றும், அதிபர் தனது அதிகார எல்லையை மீறிவிட்டார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
வணிக ரீதியிலான பாதிப்புகள்
இந்த உயர்வு H-1B விசா திட்டத்தை நடைமுறையில் பயன்படுத்த முடியாததாக ஆக்கிவிடும். குறிப்பாக, புதிய மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களால் ஒரு ஊழியருக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது. உலக அளவில் இருந்து அதிக திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் அமெரிக்காவின் திறனை இந்தக் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும். இதன் விளைவாக, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற முக்கியத் துறைகளில் அமெரிக்காவின் புதுமை மற்றும் போட்டித்தன்மை பாதிக்கப்படும். இந்த வழக்கு, உலகளாவிய திறமையாளர்களை ஈர்ப்பதில் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.